ஈரோடு பெரியவலசு பகுதியில் ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி பெண்கள் போராட்டம்


ஈரோடு பெரியவலசு பகுதியில் ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2020 4:30 AM IST (Updated: 6 May 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரியவலசு பகுதியில் ரேஷன் கடையில் நல்ல அரிசி வழங்கக்கோரி பெண்கள் ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு, 

கொரோனா ஊரடங்கு காரணமாக கூலித்தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர் போதிய வருவாய் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் அரிசி, பருப்பு ஆகியவையே உணவாக உள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வாங்க அதிகமானவர்கள் வருகிறார்கள்.

இதுபோல் ஈரோடு பெரியவலசு பகுதியில் வள்ளியம்மை நகர் முதல் வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று வந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி தரமானதாக இல்லை என்றும், கடையில் இருக்கும் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பெண்கள் அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில பெண்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி தரமானதாக இல்லை என்று கூறி அதை ரோட்டில் கொட்டினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஈரோட்டில் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் சிரமப்படும் இந்த நேரத்தில் தரமான அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story