பிளஸ்-1 வகுப்பு தேர்வு ரத்து இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


பிளஸ்-1 வகுப்பு தேர்வு ரத்து இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2020 12:00 AM GMT (Updated: 6 May 2020 6:12 PM GMT)

நடைபெறாமல் உள்ள பிளஸ்-1 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர், 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சத்து மாத்திரைகள் வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரையில் 80 சதவீத பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை ஆங்காங்கே உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அச்சகங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு முதல்-அமைச்சரின் ஒத்துழைப்போடு அப்பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களான புத்தகப்பை, சாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பள்ளி திறந்த ஒரு வார காலத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வில் இன்னும் ஒரு தேர்வு பாக்கியுள்ளது. கொரோனா தாக்குதல் குறைந்ததும் மீதியுள்ள பாடங்களுக்கான தேர்வு எந்த தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது. நீட் தேர்வுக்கு இன்று (அதாவது நேற்று) தனியார் நிறுவனத்தின் மூலம் அனைவருக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூலகங்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இடைவெளியில்லாமல் நடைபெறாது. பொதுத்தேர்வு அட்டவணையை பொறுத்தவரை இடைவெளி இருக்கும். ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் 10-ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தடுப்பிற்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் அந்தந்த மாதம் வழங்கப்படுகிறது. இறுதியில் மொத்த தொகை குறித்து அறிவிக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது. இதற்கு ஒத்துழைத்த மக்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டாக்டர் கள், செவிலியர்கள் இறைவன் போல் காத்து பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு நன்றியை தெரிவித்துக்கொள்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story