மாவட்ட செய்திகள்

தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை: கலெக்டர் மெகராஜ் அறிவிப்பு + "||" + Private offices are not allowed to: Collector Megaraj's Notice

தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை: கலெக்டர் மெகராஜ் அறிவிப்பு

தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை: கலெக்டர் மெகராஜ் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருப்பதால் தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை என கலெக்டர் மெகராஜ் அறிவித்து உள்ளார்.
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் இருந்து சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காய்கறி மற்றும் மளிகை கடைகளுடன் கூடுதலாக சில கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது.

இது தொடர்பாக கலெக்டர் மெகராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி, டீக்கடை, சலூன் மற்றும் அழகுநிலையங்கள், இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன விற்பனை ஷோரூம், நகைக்கடைகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஜவுளிக்கடைகள் போன்றவற்றை திறக்க அனுமதி இல்லை.

இதேபோல் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், சுற்றுலா தலங்கள், பூங்கா மற்றும் கூட்ட அரங்குகளை திறக்க கூடாது. தங்கும் விடுதிகள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் திறக்க அனுமதி இல்லை. குறிப்பாக தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை. வாடகை கார் மற்றும் ஆட்டோ இயங்க அனுமதி இல்லை.

தடைசெய்யப்பட்ட கடைகளை தவிர மீதமுள்ள கடைகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கலாம். காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கலாம். பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும்.

வணிகர்களும், கடைகளுக்கு வரும் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். தன் சுத்தத்தை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.