சேலத்தில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: மாவு மில் தொழிலாளி கைது


சேலத்தில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: மாவு மில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 7 May 2020 4:00 AM IST (Updated: 7 May 2020 2:38 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மாவு மில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம்,

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள செங்கல் அணைப்பகுதியில் மாவு மில் ஒன்றில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பறக்கும் படை தாசில்தார் அழகிரிசாமி, தனி தாசில்தார் (குடிமைப்பொருள்) குமரன், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட செங்கல் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அழகேசன் என்பவர், தனது மாவு மில்லில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர் கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி அதை அரைத்து மாவாக்கி சில அப்பளம் கம்பெனிகளுக்கு சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அழகேசன் மாவு மில்லில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு டன் அரைத்த மாவு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்த மாவு மில் உரிமையாளர் அழகேசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

அதேசமயம் மாவு மில்லில் வேலைபார்க்கும் தொழிலாளி சந்திரசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ரேஷன் அரிசி கடத்தி மாவாக அரைத்து விற்பனை செய்து வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story