கிளாம்பாக்கத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வடமாநில தொழிலாளர்கள் மறியல்
கிளாம்பாக்கத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வடமாநில தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடந்து வந்தன. பஸ்நிலையம் கட்டும் பணியில் ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 453 பேர் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கட்டுமான பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த 453 பேர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் நபர்கள் மிக விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன் பின்னர் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் கட்டப்படும் பகுதியில் தங்கி பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நடந்தே சென்றனர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒடிசா மாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முயன்றனர். அவர்களை திருப்போரூர் போலீசார் அம்பேத்கர் சிலை அருகே மடக்கி பிடித்தனர்.
அவர்கள் போதிய உணவின்றி தவிப்பதாகவும், பணிபுரியும் தனியார் தொழிற்சாலையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கூறினர். 3 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் தங்கியிருந்த ஆலத்தூர் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story