சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுகோள்: மாவட்டத்தில் 134 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு


சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுகோள்: மாவட்டத்தில் 134 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 7 May 2020 3:48 AM IST (Updated: 7 May 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் 134 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

கடலூர் முதுநகர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாராயம் மற்றும் மதுபாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடித்தனர்.

அங்கும் சாராயம் மற்றும் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டதால், சாராயம் காய்ச்சி சிலர் குடித்தனர். சிலர் விற்பனையும் செய்தனர். ஒரு லிட்டர் 1000 ரூபாயையும் தாண்டியது.

ஏங்கி தவிப்பு

அதேபோல் பதுக்கி வைத்திருந்தும் சிலர் மதுபாட்டில்களை விற்பனை செய்தனர். புதுச்சேரியில் ரூ.70, ரூ.80-க்கு விற்பனை செய்த குவாட்டர் பாட்டிலை வாங்கிவந்து பதுக்கி வைத்து அதை ரூ.800 வரை விற்பனை செய்தனர். அதுவும் குறிப்பிட்ட நாளில் விற்று தீர்ந்தது.

இதனால் குடிமகன்கள் அடுத்து என்ன செய்வதென்று தவித்தனர். டாஸ்மாக் கடை திறக்குமா? திறக்காதா? என்று ஏங்கி தவித்தனர். இப்படியே 40 நாட்கள் கடந்து விட்டது.

இன்று திறப்பு

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 143 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள 9 கடைகளை தவிர மற்ற இடங்களில் 134 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

ஆயத்த பணிகள்

இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி விட்டு தடுப்பு கட்டைகள் அமைத்தல், வட்டம், கட்டம் வரைதல் போன்ற பல்வேறு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கடலூர் முதுநகர் அருகே குடிகாடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் மொத்த குடோனில் இருந்து சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபாட்டில்களை வாகனங்களில் ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இங்கிருந்து குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு

இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் என மாவட்டம் முழுவதும் மற்ற குடோன்களில் இருந்து லாரிகளில் மதுபாட்டில்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்தந்த கடைகளில் ஊழியர்கள் இறக்கி பாதுகாப்பாக டாஸ்மாக் கடைகளில் அடுக்கி வைத்தனர்.

டாஸ்மாக் கடைகள் கூட்டம் அதிகமாக கூடும் வாய்ப்பு உள்ளதால், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மது பிரியர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீமுஷ்ணத்தில் டாஸ்மாக் கடை முன்பு தடுப்பு கட்டை அமைக்கும் பணியை சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். மதுவாங்க வருபவர்களுக்கு 4 குவாட்டர் பாட்டில் அல்லது 4 பீர் பாட்டில் அல்லது ஒரு புல் பாட்டில் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story