நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திருமழிசையில் காய்கறி அங்காடி இன்று திறக்கப்படுமா? - வியாபாரிகள் சந்தேகம்
சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) காய்கறி அங்காடி திறக்கப்படுமா? என்று வியாபாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
சென்னை,
பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையொட்டி, வியாபாரிகள் நலன் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடாக சென்னையை அடுத்த திருமழிசையில் இன்று (வியாழக்கிழமை) முதல் காய்கறிஅங்காடி அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அறிவித்தது. வியாபாரிகள் திருமழிசை சென்று காய்கறி வாங்கிவந்து ஆங்காங்கே விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி திருமழிசையில் துணைகோள் நகரம் அமைக்கப்பட இருக்கும் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு சமன்படுத்தும் பணி நடந்து வந்தது. காய்கறி கடைகள் அமைக்க 10 அடி இடைவெளியில் கம்பிகள் போடப்பட்டு உள்ளது. மேலும் கொட்டகை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
அதேவேளை குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, ஜெனரேட்டர் வசதி, நகரும் கழிவறை வசதிகள் என தேவையான வசதிகள் அனைத்தும் தயார்படுத்தப்பட்டு உள்ளது. திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணியை அதிகாரிகள் குழு அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஒரு கடைக்கு 200 சதுர அடி ஒதுக்கப்படும் என்பதால் சரக்கு மூட்டைகள் வைக்க சிரமம் இருக்கும் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள். மேலும் தற்போதைய சூழலில் மழை பெய்தால் காய்கறி அங்காடி அமையவுள்ள பகுதி சகதிகாடாக மாறிவிடும் என்பதால் அந்த பகுதியில் தார்சாலைகள் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், “முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாவிட்டால் கோயம்பேட்டில் என்ன பிரச்சினை வந்ததோ?, அதே பிரச்சினை திருமழிசையிலும் எழக்கூடும். எனவே பாதுகாப்பு முறைகளை அதிகாரிகள் எங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். காய்கறி கெட்டுப்போகாமல் இருக்க குளிர்பதன கிடங்குகள் தேவை. இப்போது பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே போதுமான பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தந்தால் தான் திருமழிசையில் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
முழுமையாக செயல்பாட்டுக்கு வர...
தற்போதைய சூழலில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தாலும் 200 கடைகள் அமைக்கும் அளவுக்கு இன்னும் பணிகள் முழுமையடையவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதேவேளை வியாபாரிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்றித்தர வேண்டியுள்ளது. எனவே திட்டமிட்டபடி இன்று திருமழிசையில் காய்கறி அங்காடி திறக்கப்படுமா? என்பது சந்தேகமே... இந்த சந்தேகம் வியாபாரிகளிடமும் இருக்கத்தான் செய்கிறது. காய்கறி அங்காடி திட்டமிட்டபடி இன்று செயல்பட தொடங்கினாலும், அனைத்து கடைகளும் முழுமையான செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story