வல்லம் சமுதாய கூடத்தில் பாதுகாக்கப்பட்ட ரூ.1 கோடி மதுபாட்டில்கள் 17 மதுக்கடைகளுக்கு அனுப்பி வைப்பு


வல்லம் சமுதாய கூடத்தில் பாதுகாக்கப்பட்ட ரூ.1 கோடி மதுபாட்டில்கள் 17 மதுக்கடைகளுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 6 May 2020 11:02 PM GMT (Updated: 6 May 2020 11:02 PM GMT)

வல்லம் சமுதாய கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.1 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் 17 மதுக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கள்ளப்பெரம்பூர், 

வல்லம் சமுதாய கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.1 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் 17 மதுக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மதுக்கடைகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தஞ்சை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 48 மதுக்கடைகளில் இருந்த மது பாட்டில்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வல்லம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.

மதுபாட்டில்கள் அனுப்பி வைப்பு

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்லம் சமுதாய கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மதுபாட்டில்கள் நேற்று சம்பந்தப்பட்ட மதுக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள 17 கடைகளுக்கு மட்டும் இந்த மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மதுபாட்டில்களை தவறுதலாக எடுத்து செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக 48 கடைகளில் இருந்தும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் சமுதாய கூடத்துக்கு வந்து இருந்தனர்.

ரூ.1 கோடி மதிப்பு

வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வல்லம் பேரூராட்சி அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் முன்னிலையில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த சமுதாய கூடத்தின் ‘சீல்’ அகற்றப்பட்டு மதுபாட்டில்கள் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.

மது பாட்டில்களை கடைகளுக்கு எடுத்து செல்வதை பார்ப்பதற்காக அங்கு திரண்டிருந்த மது பிரியர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மொத்தம் 17 கடைகளுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story