புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை ரெயில்வே ஏற்கிறதா என்பதை தெளிபடுத்த வேண்டும் - மராட்டிய மந்திரி கேள்வி
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை ரெயில்வே ஏற்கிறதா என்பதை தெளிபடுத்த வேண்டும் என்று மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மராட்டியம் உட்பட நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி முதல் ஊரடங்கு விதிகளில் சற்று தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மராட்டிய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் மாநிலத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும், என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய பாரதீய ஜனதா அரசு, தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய ரெயில்வே மானியமாக வழங்கும், மீதமுள்ள 15 சதவீதம் மாநில அரசு செலுத்த வேண்டும் எனக் கூறியது.
இந்தநிலையில் மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் இது குறித்து கூறியதாவது,:-
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வே உண்மையிலேயே ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இது குறித்து ரெயில்வேயிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் பெறப்படவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த 40 நாட்களாக வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே அவர்களிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பதை ரெயில்வே தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story