வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கும் முடிவு வாபஸ் - கர்நாடக அரசு திடீர் நடவடிக்கை


வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கும் முடிவு வாபஸ் - கர்நாடக அரசு திடீர் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2020 12:06 AM GMT (Updated: 2020-05-07T05:36:15+05:30)

பெங்களூருவில் கட்டுமான தொழில் பாதிக்கும் சூழல் எழுந்துள்ளதால், வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரெயில்கள் இயக்கும் முடிவை அரசு நேற்று திடீரென்று வாபஸ் பெற்றது.

பெங்களூரு, 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெங்களூருவில் சிக்கி கொண்டனர். அவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி கடந்த 4-ந் தேதி துமகூரு ரோட்டை வழிமறித்து சாலைமறியல் செய்தனர். போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் பெங்களூருவில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தொழிலாளர்கள் ரெயில்களில் அனுப்பப்பட்டு வந்தனர். இதற்காக தினமும் சிறப்பு ரெயில் கர்நாடகத்தில் இருந்து இயக்கப்பட்டது.

சிறப்பு ரெயில்கள்

இதுகுறித்து கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட மஞ்சுநாத் பிரசாத், தென்மேற்கு அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், 5 நாட்களுக்கு புதன்கிழமை தவிர தினமும் 2 சிறப்பு ரெயில்களை இயக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் மாநில அரசு தினமும் 3 ரெயில்களை இயக்க வேண்டும் என்று விரும்பியது.

இதற்கிடையே அடுத்த சில மணி நேரத்தில் ரெயில்வே அதிகாரிகளுக்கு மஞ்சுநாத் பிரசாத் மேலும் ஒரு கடிதம் எழுதி, வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல சிறப்பு ரெயில்கள் இயக்க கோரும் முடிவை வாபஸ் பெறுவதாக கூறினார். ஆனால் இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

மந்திரி ஆர்.அசோக்

முதல்-மந்திரியை நேரில் சந்தித்து பேசிய கட்டுமான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால், கட்டுமான தொழிலை மேற்கொள்வது கடினம் என்றும், எனவே அந்த தொழிலாளர்களை இங்கேயே இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தனர். பெங்களூருவில் கட்டுமான தொழில் பாதிக்கும் சூழல் எழுந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல சிறப்பு ரெயில் தேவை இல்லை என்று தென்மேற்கு ரெயில்வேக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது அவர், கர்நாடகத்தை விட்டு செல்ல வேண்டாம் என்றும், இங்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிக்கி இருக்கிறோம்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சைலேஷ் என்பவர் கூறும்போது, “எனது சகோதரர் ஐதராபாத்தில் சிக்கியுள்ளார். நான் பெங்களூருவில் தவிக்கிறேன். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை இழந்து சிக்கலில் சிக்கி இருக்கிறோம். எனது பெற்றோர் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். வேலை இல்லாததால் அந்த கடனை அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார்.

பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள ஒரு குடிசை பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அங்கு 14 பேர் 4 சிறிய அறைகளில் தங்கியுள்ளதாகவும், உணவு பொருட்கள் வாங்க பணம் இல்லை என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Next Story