வெளிமாவட்டத்திலிருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தல்
வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர அ.தி.மு.க. சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஆலோசனையின் பேரில், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் அனைத்து தொழில்களும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று வியாபாரிகளும் தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில், தற்போது மாவட்ட அ.தி.மு.க. சார்பில், நான்கு புறமும் கிருமிநாசினி தெளிக்கும் அதிநவீன ஏழு வாகனங்களை ஜெர்மனியில் இருந்து கொண்டு வந்து தற்போது திருத்தங்கல், சிவகாசி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படும். வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் தாமாகவே முன்வந்து காவல்துறை அல்லது சுகாதாரத்துறையினர்களிடம் கூறி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கிராமப்பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இல்லை. அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 25 வருடங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் கோடை காலங்களில் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது திறந்து விடப்படும் வைகை நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்புவனம், ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள அணைகள் வறண்டு விட்டதால் 200 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கையை முதல்-அமைச்சரிடம் கொடுத்து கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் ரூ.448 கோடி நிதி ஒதுக்கி தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் இப்பணிகள் முழுமையாக முடிவடைந்து குடிநீர் பிரச்சினை தீர்ந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்பாடுகளை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகவாசுதேவன் செய்திருந்தனர். சாத்தூர் ஒன்றிய செயலாளர் தேவதுரை உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்று வரும் சுகாதாரபணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு செய்தார். அப்போது திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story