சீர்காழி அருகே பரபரப்பு: ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோன கோவில் அர்ச்சகர் மர்ம சாவு போலீசார் விசாரணை


சீர்காழி அருகே பரபரப்பு: ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோன கோவில் அர்ச்சகர் மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 May 2020 12:14 AM GMT (Updated: 7 May 2020 12:14 AM GMT)

சீர்காழி அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட கோவில் அர்ச்சகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சீர்காழி,

சீர்காழி அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட கோவில் அர்ச்சகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சிலை கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஐம்பொன் சிலைகள் கொள்ளை

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை கீழ் பழனி என பக்தர்கள் அழைக்கிறார்கள்.

இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய 3 சாமி சிலைகள் கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அர்ச்சகர் மர்ம சாவு

இந்த கோவிலின் அர்ச்சகராக நடராஜன்(வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். கோவில் வாசலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குன்னம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும் நடராஜன் பூஜை செய்து வந்தார். கொண்டல் குமார சுப்பிரமணியசுவாமி கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் இருந்து குன்னம் சிவன் கோவிலுக்கு நடராஜன் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் துணைக்கு ஒருவரை அழைத்து சென்று வந்ததாகவும், மற்ற நேரங்களில் அவரது மகன்கள் குன்னம் கோவில் பூஜையை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கத்துக்கு மாறாக நடராஜன், மொபட்டில் தனியாக குன்னம் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

அப்போது கீழமாத்தூர் என்ற ஊரில் வீரன்கோவில் பின்புறம் நடராஜன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

கொலையா?

இதையடுத்து அவருடைய உடலை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் அங்கு விரைந்து சென்று நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நடராஜன் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? வழக்கத்துக்கு மாறாக நேற்று அவர் தனியாக கோவிலுக்கு சென்றதற்கான காரணம் என்ன? குமார சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து சிலைகளை கடத்தி சென்ற கடத்தல்காரர்கள் அவரை கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் கடத்தப்பட்ட நிலையில் அதே கோவிலின் அர்ச்சகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story