போலீஸ்காரர் உள்பட மதுரையில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிப்பு 112-ஆக உயர்வு


போலீஸ்காரர் உள்பட மதுரையில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிப்பு 112-ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 May 2020 5:46 AM IST (Updated: 7 May 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஒரே நாளில் போலீஸ்காரர் உள்பட 20 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்தது.

மதுரை, 

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 15 அதிகரித்ததுதான் இதுவரை உச்சமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் மதுரை நகர் பகுதியில் 12 பேரும், புறநகர் பகுதியில் 8 பேரும் அடங்குவர். இவர்களில் 12 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள். பெண்களில் 5 பேர் கர்ப்பிணிகள். இது போல் 8 வயது சிறுவன், 4 வயது சிறுமி, 14 வயது சிறுவன், 15 வயது சிறுமி ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் சந்தைப்பேட்டை, அல்லிகுண்டம், கொடிக்குளம், வில்லாபுரம், மீனாட்சி நகர், டி.பி.கே.ரோடு, மேலூர், கூடல்புதூர், கீரைத்துறை, பெத்தானியாபுரம், மீனாம்பாள்புரம், கோ.புதூர், மகபூப்பாளையம், விளாச்சேரி, பனையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் மதுரை மேலூரை சேர்ந்த 4 பேருக்கும், செல்லூரை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீஸ்காரர்

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 42 வயது போலீஸ்காரர் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக பணியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவருடன் பணியாற்றிய சில போலீஸ்காரர்களுக்கும், இவர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 20 பேரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரியவருகிறது. அதன்பேரில் அவர்கள் சென்று வந்த இடங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் நோய் பரவியிருக்கிறது.

112-ஆக உயர்வு

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 20 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல்இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களிலும் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே பொதுமக்கள் ஊரடங்கை சரிவர கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

4 பேர் குணமடைந்தனர்

மதுரையை பொறுத்தமட்டில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 44 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோல் நேற்று அண்ணா நகர், வண்டியூர், ரேஸ்கோர்ஸ் காலனி, மேலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை டீன் சங்குமணி வழி அனுப்பிவைத்தார்.

Next Story