மாவட்ட செய்திகள்

1957-ம் ஆண்டு உலகை கதிகலங்க செய்த ‘ஆசிய காய்ச்சல்’ நோய் - போலீசாரின் சேவையை பாராட்டி உயர் அதிகாரி எழுதிய குறிப்பு + "||" + Asian influenza epidemic - a note written by a high-ranking official praising the police

1957-ம் ஆண்டு உலகை கதிகலங்க செய்த ‘ஆசிய காய்ச்சல்’ நோய் - போலீசாரின் சேவையை பாராட்டி உயர் அதிகாரி எழுதிய குறிப்பு

1957-ம் ஆண்டு உலகை கதிகலங்க செய்த ‘ஆசிய காய்ச்சல்’ நோய் - போலீசாரின் சேவையை பாராட்டி உயர் அதிகாரி எழுதிய குறிப்பு
தற்போது கொரோனாவை போன்று 1957-ம் ஆண்டு ஆசிய காய்ச்சல் தொற்று நோய் உலகை கதிகலங்க செய்துள்ளது. அப்போது போலீசாரின் சேவையை பாராட்டி உயர் அதிகாரி எழுதிய குறிப்பு தற்போது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம்,

உலக அளவில் பெரும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. இந்த கொரோனா தொற்று நோயை போல மனித வரலாற்றில் பலவித வைரஸ் நோய்கள் மக்களை பலிவாங்கி உள்ளன. ஸ்பானீஷ் காய்ச்சல், ஹாங்காங் காய்ச்சல், பன்றி காய்ச்சல், பிளேக், காலரா, அம்மை என பல்வேறு வகையான நோய்கள் மக்களை கடுமையாக பாதித்துள்ளன. அந்த வகையில் கடந்த 1957-ம் ஆண்டு பரவிய ‘ஆசிய காய்ச்சல்’ நோயும் உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாங்காங்கில் தொடங்கிய இந்த காய்ச்சல் சீனாவில் பரவி, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தலை தூக்கியது. அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் பலியானதாக சோக வரலாற்று தகவல்கள் உள்ளன. இந்த ஆசிய காய்ச்சல் மீண்டும் 2-வது முறையாக 1958-ம் ஆண்டும் பரவி பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இந்த ஆசிய காய்ச்சல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

கடந்த 1957-ம் ஆண்டு வேகமாக பரவி பலரை பலி வாங்கிய ஆசிய காய்ச்சலில் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். குறிப்பாக கமுதி சிறப்பு காவல்படையில் இருந்த 35 பேர், மக்கள் பணியாற்றியபோது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் போலீசாரிடையே அச்சம் ஏற்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் கமுதி சிறப்பு காவல்படைக்கு கடந்த 1957-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி ஆய்வுக்கு வந்திருந்த தென்மண்டல டி.ஐ.ஜி. எம்.ஜே.ஹோல்ம்ஸ் ஒரு குறிப்பை எழுதி இருக்கிறார். அதில், “ஆசிய காய்ச்சல் பரவிவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இங்கு பணியாற்றிய 35 ஆண் காவலர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் உள்ள நிலையிலும் காவலர்கள் கடமை தவறாது மக்களை காக்கும் பணியோடு, அதிகாலை கூட்டு கவாத்து அணிவகுப்பு மேற்கொண்டுள்ளர்கள். காவலர்களின் கடமை உணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இது உள்ளது” என்று வாழ்த்தி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரசால் காவலர்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையிலும் நோய் தடுப்பு, மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழக போலீசாரின் பணி பாராட்டிற்குரியது.

இதற்காக தமிழக டி.ஜி.பி.திரிபாதி, “தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி மக்களின் உயிரை காப்பதில் தமிழக காவல்துறையினர் மீண்டும் தங்களது ஒருமித்த எழுச்சியை வெளிப்படுத்தி, முதன்மையான வெற்றியாளர்களாக திகழ்கிறீர்கள்” என்று அனைத்து போலீசாரையும் பாராட்டி வாழ்த்து கடிதம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.