ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் மயிலாடுதுறை முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் மயிலாடுதுறை முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குத்தாலம்,
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் மயிலாடுதுறை முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடைகள் திறப்பு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளித்தன. அதன்படி அத்தியாவசிய கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மயிலாடுதுறை நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள், சலூன் கடைகள், இன்னும் சில வர்த்தக நிறுவனங்களை தவிர்த்து பெரும்பாலான கடைகள் 3-வது நாளாக திறக்கப்பட்டுள்ளன. இதனால் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க திரண்டனர். நேற்று முன்தினம் முதல் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பட்டமங்கலத்தெரு, பெரியக்கடைத்தெரு, காந்திஜிரோடு, பழைய ஸ்டேட் பாங்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தெருக்களின் எல்லையில் சாலையின் குறுக்கே கயிறுகளை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குவிந்த பொதுமக்கள்
ஆனாலும், 3-வது நாளான நேற்றும் கொரோனா வைரசின் அச்சமின்றி மயிலாடுதுறை நகரில் பொதுமக்கள் அதிகமாக குவிந்தனர். குறிப்பாக மயிலாடுதுறை கச்சேரி சாலை, அரசு மருத்துவமனை சாலை, தரங்கம்பாடி சாலை, கும்பகோணம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் பொதுமக்கள் அதிகமாக கூடினர். இந்த சாலைகளில் அதிகமாக வாகனங்கள் சென்றதால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்தனர்.
தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடைகளில் பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் பழைய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைவீதிகளில் கயிறுகளை கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு இயங்கி வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை. இதனால் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் நடைபெறவில்லை என்று வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
Related Tags :
Next Story