குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது


குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 May 2020 2:22 AM GMT (Updated: 2020-05-07T07:52:31+05:30)

கருமத்தம்பட்டியில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கருமத்தம்பட்டி,

நாடு முழுவதும் இணையதளங்களில் குழுந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவு பதிவேற்றம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தமிழக போலீசார் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வளையபாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் ரங்கநாதன் (வயது 29). இவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ததாக சென்னை சைபர் கிரைம் போலீசார் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கைது

தகவலின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரங்கநாதனை கைது செய்தனர் அவர்மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகமாக பார்ப்பதால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதன்படி குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

எனவே யாரும் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்யவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ கூடாது. மீறினால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். 

Next Story