ஆம்பூர் பகுதியில் கொடியில் பழுத்து வாடும் வெற்றிலையால் வதங்கும் விவசாயிகள்


ஆம்பூர் பகுதியில் கொடியில் பழுத்து வாடும் வெற்றிலையால் வதங்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 7 May 2020 3:47 AM GMT (Updated: 7 May 2020 3:47 AM GMT)

கொரோனா தொற்று காரணமாக வெற்றிலையை பறிக்க முடியாததால் அவை வதங்கி வருகின்றன. இதனால் விவசாயிகளும் இழப்பை ஈடுகட்ட முடியாமல் வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர்,

வாழ்க்கையின் சிறப்பிற்கு முதல்படியும், வாழ்வாங்கு வாழ்த்து சொல்லவும், இறைவனுக்கும், இல்லறத்திற்கும் வாழ்த்து மகிழ்ச்சியை தருவது வெற்றிலை. மருத்துவத்திலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகே ரெட்டிமாங்குப்பம், கீழ்முருங்கை, வெங்கிளி, மாதனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படுகிறது.இங்கு பயிரிடப்படும் வெற்றிலை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மாதனூர் பகுதி, வெற்றிலை விற்பனைக்கு முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைக் கொடி பயிரிடப்பட்டு வரப்படுகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். கொரோனா தடைக்காலத்திற்கு முன்னதாக வெற்றிலை பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் வெற்றிலையை அறுவடை செய்யாமல் விட்டதால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

அறுவடை செய்ய முடியவில்லை

ஆம்பூர் பகுதியை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு சுமார் 3 ஆயிரம் கவுளி வெற்றிலை அறுவடையாகும். ஒரு கவுளி என்பது 100 வெற்றிலை கொண்டதாகும். இவை 80 கவுளி முதல் 100 கவுளி கொண்டதாக கட்டு கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும். விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ஒரு கவுளி வெற்றிலையை சுமார் ரூ.15 முதல் ரூ.20-க்கு வாங்குகின்றனர். ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கவுளி வெற்றிலை ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஏற்கனவே பருவ மழை பொய்த்ததால் விளைச்சல் இல்லாமல் இருந்தது. அவ்வாறு விளைந்து அறுவடை செய்த வெற்றிலைக்கும் உரிய விலை கிடைக்காமல் போனதால் இழப்பைத்தான் விவசாயிகள் சந்தித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக வெற்றிலை பயிரை அறுவடை செய்ய முடியாமல் கடுமையான பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெற்றிலை விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா தடை காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறவில்லை. கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட, மக்கள் கூடும் சுப நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமண நிகழ்ச்சிகள் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் காரணமாக வெற்றிலை வியாபாரம் அறவே நடைபெறவில்லை.

உரமாக மாற்றுகின்றனர்

வெற்றிலை வியாபாரம் நடைபெறாததால் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள் அதனை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் கொடியிலேயே வெற்றிலை பயிர் பழுத்து காய்ந்து போய் வருகின்றது. அதன் காரணமாக வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள் வதங்கிய நிலையில் தினமும் வெற்றிலை பயிரை பார்த்து, பார்த்து கண்ணீர் சிந்தி வருகின்றனர். 144 தடை உத்தரவு நீக்கப்படும் கடைகள் திறக்கப்பட்டு, கோவில் திருவிழாக்கள் நடைபெறும் என வெற்றிலை விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலை பறித்து அதனை கீழே போட்டு நிலத்திற்கு உரமாக மாற்றி வருகின்றனர்.

வெற்றிலை பறிப்பில் ஆம்பூர் தாலுகா பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போது வெற்றிலை பறிப்பது இல்லை என்பதால் அவர்கள் சாப்பாட்டுக்கூட வழியில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1½ லட்சம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு செல்கின்றனர். ஆம்பூர் பகுதியில் கரும்பு விவசாயம் படிப்படியாக அழிந்து வரும் நிலையில் தற்போது வெற்றிலை விவசாயிகளும் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்கள் தொடர்ந்து அத்தொழிலில் ஈடுபடவும் தமிழக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story