கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது


கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 7 May 2020 5:24 AM GMT (Updated: 7 May 2020 5:24 AM GMT)

கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

புதுக்கோட்டை, 

கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கோயம்பேடு தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னை நெற்குன்றம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ஆயிங்குடி கிராமத்தில் கணேசன் என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து அனுமதி பெற்று 3 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் ஆயிங்குடி கிராமத்திற்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13-வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை லட்சுமி நகருக்கு வந்த 60 வயதான தொழிலாளி ஒருவர் ராணியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சிறுமி உள்பட 2 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் புதுக்கோட்டை லட்சுமிநகரில் தொழிலாளி வீடு இருக்கும் பகுதியை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக அனைத்து பொருட்களையும் நடமாடும் வாகனம் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்பிரமணியன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் மற்றும் போலீசார், மருத்துவ குழுவினர் நேற்று அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் வசிப்பவர்களில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என விசாரித்து பரிசோதனை மேற்கொள்கின்றனர். மேலும் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் சூரணமும் வினியோகிக்கப்படுகிறது. அந்த பகுதியில் திறந்திருந்த ஒரு கடையை அடைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

சாலைகள் அடைப்பு

இதேபோல ஆயிங்குடி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பெருங்குடியில் இருந்து ராயவரம் செல்லும் பாதை சு.கதி.காந்தி உயர்நிலைப்பள்ளி அருகேயும், கொத்தமங்கலம் ஆயிங்குடி சாலையும் அடைக்கப்பட்டது. ராயவரத்தில் இருந்து ஆயிங்குடி செல்லும் சாலைபொன்னியம்மன் கோவில் அருகேயும், கானாப்பூர் சாலை கே.செட்டிபட்டி அருகேயும் அடைக்கப்பட்டது. இதனால் வெளியில் இருந்து ஆயிங்குடி கிராமத்திற்கும், ஆயிங்குடியில் இருந்து வெளியிலும் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ராயவரம் மற்றும் ஆயிங்குடி கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று காலை 6 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொள்கின்றனர். மேலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

எண்ணிக்கை உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதில் மிரட்டுநிலை கிராம வாலிபர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story