வெள்ளகோவில் அருகே 2 நூற்பாலைகளில் பயங்கர தீவிபத்து - பல கோடி ரூபாய் எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம்


வெள்ளகோவில் அருகே 2 நூற்பாலைகளில் பயங்கர தீவிபத்து - பல கோடி ரூபாய் எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 7 May 2020 11:45 PM GMT (Updated: 2020-05-07T23:20:12+05:30)

வெள்ளகோவில் அருகே 2 நூற்பாலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம் அடைந்தன.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி கவுண்டர். இவருடைய மகன் கதிரேசன்(வயது 45). இவர் அதே பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக நூற்பாலை நடத்தி வருகிறார். இதில் 150 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நூற்பாலை மூடப்பட்டு இருந்தது. அந்த மில்லில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் என 49 பேர் நூற்பாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் பூட்டப்பட்டு இருந்த நூற்பாலையில் காவலாளிகள் மட்டும் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் நூற்பாலையில் இருந்து லேசாக கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்தது. அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த பயங்கர தீ விபத்து குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கும், நூற்பாலை உரிமையாளருக்கும் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனே கொடுமுடி, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

அந்த வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தனியாருக்கு சொந்தமான 30 குடிநீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் நாசம் அடைந்தன. நூற்பாலையில் தயாரான 3 ஆயிரம் நூல் பைகள் எரிந்து நாசமானது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துணை அலுவலர் வெங்கட்ரமணன், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தீயை அணைக்கும் பணியை முடுக்கி விட்டனர். பல மணி நேரமாக தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதியே ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல வெள்ளகோவிலில் மற்றொரு நூற்பாலையிலும் தீ விபத்து ஏற்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

வெள்ளகோவில் உப்புபாளையத்தில் எம்.பி.நகரில் விஜயகுமார்(43) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக நூற்பாலை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக நூற்பாலை செயல்படாமல் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு நூற்பாலை மீது சென்ற மின்கம்பிகள் உராய்வு ஏற்பட்டதால் அதில் ஏற்பட்ட தீப்பொறி அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 டன் பஞ்சு மூட்டைகள் மீது பட்டது. சிறிது நேரத்தில் பஞ்சு மூட்டைகள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Next Story