சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்த வடமாநில தொழிலாளர்கள் - 10 பேர் கைது
பெருமாநல்லூர் அருகே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் டயர் களை எரித்து வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாநல்லூர்,
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த நியூதிருப்பூர் பகுதியில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 80 சதவீதத்துக்கும் மேலாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பழங்கரை, நியூ திருப்பூர், பரமசிவம்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இங்கு வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் வேலை இல்லாத காரணத்தினால் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அடிப்படை தேவைகளை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து வந்த போதும் பொருளாதார அடிப்படையில் மிகவும் சிக்கலை சந்தித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அங்கு வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் ஒன்று கூடினார்கள். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி நியூதிருப்பூர் அருகே உள்ள சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுரோட்டில் டயர்களை போட்டு தீ வைத்தனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்தனர். பின்னர் அவர்கள் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதிக்கு சென்று சாலை மறியல் செய்யவும் முயற்சித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருமாநல்லூர் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி அனைவரையும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா வளாகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களது விவரங்களை சேகரித்து அவர்கள் பணிபுரியும் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு வரவழைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சொந்த ஊருக்கு செல்வது பற்றி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்கள். இதையடுத்து அவர் கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த சச்சிந்தர்குமார்(வயது 24), மெகஹருதீன்(24), பிஜய்(22) பீகாரை சேர்ந்த மேகநாத்குமார்(24), லால்பாபு குமார்(22), நீரஜ்குமார்(24), ஆர்யான்(22), நித்திஷ்குமார்(21) ஒடிசாவை சேர்ந்த தப்பான்தலாய்(35), மத்திய பிரதேசத்தை சேர்ந்த சபீன்குமார்(23) ஆகிய 10 பேரும் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story