கடலூரில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 3:19 AM IST (Updated: 8 May 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் கடலூர் செம்மண்டலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோ. அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். இதில் கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், சேகர், வக்கீல் வினோத்குமார், நிர்வாகிகள் பிரபு, தயாளு, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

கடலூர் புதுப்பாளையம் கடைத்தெருவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளருமான இள.புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக கடலூர் மாவட்ட தலைவர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் சிவானந்தம், கிளை செயலாளர் டிங்கர் ரவி, பிரதிநிதி அண்ணாமலை, இளைஞர் அணி ராஜா, அய்யப்பன், இளங்கோ ஆகியோர் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியினர்

கடலூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள நகர தலைவர் வேலுசாமி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் வேலுசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் குடை பிடித்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் ரங்கமணி, வட்டார தலைவர் ரமேஷ் ரெட்டியார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கிஷோர், காமராஜ், நகர செயலாளர்கள் ராஜேந்திரன், பாலகுரு, பொருளாளர் ராஜூ சவுக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலக் குழு உறுப்பினர் மாதவன் தலைமையில் கடலூர் உழவர் சந்தை அருகில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகம் முன்பு கருப்பு கொடியுடன் கோரிக்கை அட்டை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், நகரகுழு உறுப்பினர்கள் சேட்டு, ஏழுமலை, தைனீஸ்மேரி, கிளை செயலாளர் அல்லாபிச்சை, பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.ஏ.சி.சி. பாங்க் காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் ஏழுமலை, துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் தங்கராஜ் நகர், அக்கிள்நாயுடு தெரு ஆகிய இடங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story