கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் டாக்டர், செவிலியர்கள் உள்பட 32 பேருக்கு கொரோனா தொற்று


கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் டாக்டர், செவிலியர்கள் உள்பட 32 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 7 May 2020 9:58 PM GMT (Updated: 2020-05-08T03:28:18+05:30)

சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் செவிலியர்கள் உள்பட 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவலை தடுக்க கிராம அளவில் குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு உள்ள பகுதியில் பொதுமக்கள் யாரும் உள்ளே வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை உள்ள நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 324 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,877 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

மேலும் 32 பேர் பாதிப்பு

இந்த நிலையில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர், 4 செவிலியர்கள், ஒரு தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் வழங்கப்படாததே நோய் தொற்று ஏற்பட காரணம் என புகார் எழுந்துள்ளது. இவர்களைத் தவிர மீதமுள்ள 26 பேர் கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324ல் இருந்து 356 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர கொரோனா அறிகுறி உள்ள 105 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் 64 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் 51 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 32 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் 17 பேர் திட்டக்குடி அரசு மருத்துவமனையிலும் என மொத்தம் 269 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 2 ஆயிரத்து 150 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

Next Story