டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: தி.மு.க., ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: தி.மு.க., ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-08T03:51:22+05:30)

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டலூர்,

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதை கண்டித்து செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் மறைமலைநகரில் உள்ள தனது வீட்டு வாசல் முன்பு சமூக இடைவெளியை கடைப்பிடித்து கட்சி தொண்டர்களுடன் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தி.மு.க.வினர் அவரவர் வீட்டு வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் காஞ்சீபுரத்தில் உள்ள தனது வீடு அருகே கருப்புசட்டை அணிந்து, கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங் களை எழுப்பினார்.

காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் அருகே ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் ம.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மதுக்கடைகளை மூடக்கோரி கோஷங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் டி.ஏ.ஜி.அசோகன் தனது வீட்டின் அருகே உள்ள மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

புதுப்பட்டினம்

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தில் தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிந்து கிழக்கு கடற்கரை சாலையில் சமூக இடைவெளி விட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதற்கு புதுப்பட்டினம் நகர தி.மு.க. பொறுப்பாளர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம்

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் விசுவநாதன் தலைமையில் மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முகப்பு வாயிலில் கருப்பு சட்டை அணிந்து தி.மு.க. வினர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாமல்லபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Next Story