டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: தஞ்சையில், பூ வியாபாரிகள் சாலை மறியல் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: தஞ்சையில், பூ வியாபாரிகள் சாலை மறியல் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 May 2020 10:25 PM GMT (Updated: 7 May 2020 10:25 PM GMT)

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், பூ வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர், 

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், பூ வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தஞ்சை பூக்காரத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க நேற்று ஊழியர்கள் முற்பட்டனர். அப்போது அங்கு வந்த பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம்

கடந்த 43 நாட்களாக பூச்சந்தை மூடப்பட்டு எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் பூச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுங்கள், பின்னர் மதுக்கடைகளை திறக்கலாம் எனக்கூறி சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பூச்சந்தையை திறப்பது குறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு டாஸ்மாக்கடை திறக்கப்படாது என தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதேபோல் டாஸ்மாக்கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவை போலீசார் கைது செய்தனர்.

Next Story