கோயம்பேடு சந்தை மூடல் எதிரொலி: சென்னை கடைகளில் காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு - விலையும் கிடுகிடு உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி


கோயம்பேடு சந்தை மூடல் எதிரொலி: சென்னை கடைகளில் காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு - விலையும் கிடுகிடு உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-08T04:00:21+05:30)

கோயம்பேடு சந்தை மூடப்பட்டதின் எதிரொலியாக சென்னை கடைகளில் காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கிடைக்கும் ஒரு சில காய்கறியின் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. தற்போதைய சூழலில் சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. 

கோயம்பேடு சந்தை மூடப்பட்டதின் விளைவாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் ஏற்கனவே மொத்த வியாபாரிகள் கையாளுகையில் இருந்த சரக்குகளே தற்போது விற்பனை ஆகிறது. 

சரக்கு வண்டிகளில் வரும் காய்கறியையும் சில்லறை வியாபாரிகள் மொத்தமாக வாரிச்சுருட்டி வாங்கி கொள்கிறார்கள். மேலும் 2-ம் தர வியாபாரிகளும் அதிகளவு ஆர்வம் காட்டுவதால் நகரத்து கடைகளில் காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேவேளையில் கிடைக்கும் காய்கறியும் ‘கிடுகிடு’வென விலை உயர்ந்து மக்களை மலைக்கச் செய்துள்ளது.

கடந்த வார விலையுடன், இந்த வார காய்கறி விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

அடைப்புக்குறிக்குள் உள்ளது கடந்த வார விலை நிலவரம்.

விலை நிலவரம்

எலுமிச்சை ரூ.120 (ரூ.40), உருளைக்கிழங்கு ரூ.65 (ரூ.35), முட்டைக்கோஸ் (ஒன்று) ரூ.40 (ரூ.20 வரை), கேரட் ரூ.60 (ரூ.35), பீட்ரூட் ரூ.60 (ரூ.20), டர்னிப் ரூ.60 (ரூ.35 வரை), பச்சை பட்டாணி ரூ.170 முதல் ரூ.180 வரை (ரூ,80 முதல் ரூ.90 வரை), காலிபிளவர் (ஒன்று) ரூ.35 (ரூ.25), சவ்சவ் ரூ.40 முதல் ரூ.45 வரை (ரூ.20), சேனைக்கிழங்கு ரூ.50 (ரூ.25), இஞ்சி ரூ.130 முதல் ரூ.140 (ரூ.90 வரை), சுரைக்காய் ரூ.40 முதல் ரூ.45 வரை (ரூ.20 முதல் ரூ.25 வரை), முருங்கைக்காய்(ஒன்று) ரூ.6 முதல் 10 வரை (ரூ.5), அவரை ரூ.80 (ரூ.40), வெண்டை ரூ.60 முதல் ரூ.65 வரை (ரூ.30), கத்தரி (உஜாலா) ரூ.60 (ரூ.35), கத்தரி (வரி) ரூ.40 (ரூ.20), தேங்காய் (ஒன்று) ரூ.50 முதல் 60 வரை (ரூ.35 வரை), குடைமிளகாய் (ஒன்று) ரூ.10 முதல் ரூ.12 வரை (ரூ.6 வரை), பல்லாரி ரூ.40 (ரூ.25), சாம்பார் வெங்காயம் ரூ.110 வரை (ரூ.60), பச்சை மிளகாய் ரூ.60 முதல் ரூ.70 வரை (ரூ.25), பூசணிக்காய் ரூ.25 (ரூ.15), பாகற்காய் ரூ.60 (ரூ.30), தக்காளி ரூ.35 (ரூ.15).

Next Story