மாவட்ட செய்திகள்

விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் + "||" + Villupuram- Thiruvennayinallur Task force women struggle

விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வருமானமின்றி அரை, குறை பசியுடன் பெரும் இன்னலில் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை கடைகளை தவிர பிற கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்படாத நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எதிர்ப்புகளை மீறி நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம் நடந்தது.


துடைப்பத்துடன் போராட்டம்

விழுப்புரம் அருகே உள்ள காணை ஒன்றியத்திற்குட்பட்ட காணை, பெரும்பாக்கம், சிறுவாக்கூர், சோழகனூர் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பாக்கம், சிறுவாக்கூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. மாறாக காணை, சோழகனூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் அந்த கடைகளில் மதுவாங்க மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதையறிந்த காணை கிராமத்தை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் துடைப்பம், செருப்பு, முறம் ஆகியவற்றுடன் காலை 10 மணியளவில் அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடையை திறந்ததை கண்டித்தும், உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற மதுப்பிரியர்களிடம், டாஸ்மாக் கடைக்கு செல்லாதீர்கள் என்று துடைப்பத்தை உயர்த்தி காட்டியபடி எச்சரித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேவதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் பெண்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கரடிப்பாக்கத்தில் மூடல்

இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடந்தது. இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு திரண்டு வந்தனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் வேல்முருகன், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை மூடினால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி அவர்கள், போலீசாாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அதன் பிறகு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த டாஸ்மாக் கடையை போலீசார் மூடியதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டங்களினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் நேற்று 2 டாஸ்மாக் கடைகள் திறக்க ஏற்பாடுகள் நடந்தது. இதையறிந்த அக்கிராம மக்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள டாஸ்மாக் கடையை திறக்குமாறும், ஊர் நுழைவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ஊர் நுழைவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. காவலில் கருப்பர் பலியால் போராட்டம் வலுக்கிறது: அமெரிக்காவில் போலீஸ் நிலையத்துக்கு தீ
அமெரிக்காவில் காவலில் இருந்த கருப்பர் பலியானதால், போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது.
2. முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு: புதுவையில் மின்துறை ஊழியர்கள் போராட்டம்
தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்
கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்.