கொரோனா உயிரிழப்பை தடுக்க முதியவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் - டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனா உயிரிழப்பை தடுக்க வீட்டில் உள்ள முதியவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம். வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்ததால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். விரைவில் நல்ல செய்தி வரும். சென்னையில் 50 சதவீதத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு உள்ள நபர்கள் 20 பகுதிகளில் மட்டுமே உள்ளனர்.
திரு.வி.க நகர், ராயபுரம், கோடம்பாக்கம் தேனாம்பேட்டை, அண்ணாநகர், தண்டையார்பேட்டை, வளசரவாக்கம் மண்டங்களில் குறிப்பாக ஒரு வார்டில் மட்டும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இறப்பு விகிதம் குறைவு
தட்டாங்குளத்தில் உள்ள ஒரு தெருவில் மட்டும் 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. திருவான்மியூர் மார்க்கெட்டை உடனடியாக மூடினாலும் கூட, அந்த பகுதிகளில் முழுமையான கவனம் செலுத்தி தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொருத்தவரை தமிழகம் 0.8 என்ற மிக குறைவான கொரோனா இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் இந்த இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்காக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளோம்.
குறிப்பாக முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புற்றுநோயாளிகளை அவர்கள் குடும்பத்தினர் தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.
நடமாடும் ஏ.டி.எம். வசதி
சென்னையில் கடைசியாக இறந்த 2 நோயாளிகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள். இவர்களை போன்றவர்களை காப்பாற்றுவதில் கடினமான சூழ்நிலை உருவாகிறது. சளி, காய்ச்சல் இருப்பவர்கள் தயவு செய்து மருத்துவமனையில் வந்து பரிசோதித்து கொள்ளுங்கள்.
இப்பொழுது பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்து, மக்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். இதற்கு சென்னை மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது என கண்டிப்பான முறையில் பின்பற்ற சொல்லியிருக்கிறோம். அந்த பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம் வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கு, அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 ஒருங்கிணைப்பு குழுக்கள்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்பேரிலேயே எந்த ஒரு நோய் தொற்று அறிகுறியும் இல்லாத 515 பேரை சென்னை வர்த்தக மையம், வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற இடங்களில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். அங்கு கூடுதலாக படுக்கைகளும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் போர்கால அடிப்படையில் பணி செய்ய 12 ஒருங்கிணைப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதற்கு தான் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story