கர்நாடகம், உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை - மந்திரி நவாப் மாலிக் குற்றசாட்டு
கர்நாடகா, உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை என மந்திரி நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.
மும்பை,
கொரோனா ஊரடங்கால் மராட்டியத்தில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர்.
இந்தநிலையில் ஊரடங்கில் மத்திய அரசு செய்த தளர்வுகளின்படி மராட்டிய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு கர்நாடக மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மராட்டிய மந்திரி நவாப் மாலிக் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாரதீய ஜனதா அரசுகள்
மராட்டியத்துக்கு புலம்பெயர்ந்து தவித்து வரும் தொழிலாளர்களை திரும்ப அழைத்து கொள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மற்றும் கர்நாடக மாநில அரசுகள் ஒத்துழைக்கவில்லை. இந்த மாநிலங்கள் வேண்டுமென்றே புதிய தடைகளை உருவாக்குகின்றன. பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் போன்ற பிற மாநிலங்கள் இதுபோன்ற நடைமுறை பிரச்சினையை உருவாக்கவில்லை. அந்த மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்ப அழைத்து கொள்ளும் நடைமுறை சுமூகமாக உள்ளது.
உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகள் தங்கள் மாநிலத்தை சேர்ந்த மக்கள் பெருமளவில் திரும்ப வருவதை ஆதரிக்கவில்லை அல்லது வேண்டும் என்றே தடைகளை உருவாக்குகின்றன. இந்த இரு மாநில அரசுகளும் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மராட்டியத்தில் தங்குவதற்கு மனதளவில் தயாராக இல்லை. தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பவே விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story