மதுபானம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இல்லை - சிவசேனா கூறுகிறது


மதுபானம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இல்லை - சிவசேனா கூறுகிறது
x
தினத்தந்தி 8 May 2020 5:00 AM IST (Updated: 8 May 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

மதுபானம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இல்லை என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்து உள்ளது.

மும்பை, 

மராட்டியம் உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மராட்டிய அரசு மதுக்கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளித்தது. 

இதனால் மது கிடைக்காமல் காய்ந்து போயிருந்த மதுபிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு மது பாட்டில்களை வாங்கி குவிந்தனர். கொரோனா அச்சுறுத்தலை மறந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் அவர்கள் திரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மும்பையில் மதுக்கடைகளை மூட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். மற்ற பல மாவட்டங்களில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இ்ந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

தடுப்பு மருந்து இல்லை

மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் சிலருக்கு ஏற்பட்ட சந்தோஷம் குறுகிய காலமே நீடித்தது. மும்பையில் மதுக்கடைகளை மூட நிர்வாகம் மீண்டும் உத்தரவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. மும்பையில் மட்டும் 2 நாட்களில் மதுபான விற்பனை மூலமாக ரூ.65 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் புதிதாக 635 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் நோய் பாதிப்பிற்கு உயிரிழந்துள்ளனர். மதுபான கடைகளை திறந்ததன் பக்கவிளைவுகளை 24 மணி நேரத்திற்குள் காணமுடிந்தது.

ரூ.65 கோடி வருவாய்க்காக 65 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றை எங்களால் விலை கொடுத்து வாங்க முடியாது. மதுபானம் ஒன்றும் வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story