மராட்டியத்தில் இந்த மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்படுத்தப்படும் - உத்தவ் தாக்கரே பேச்சு


மராட்டியத்தில் இந்த மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்படுத்தப்படும் - உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 8 May 2020 5:15 AM IST (Updated: 8 May 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இந்த மாத இறுதிக்குள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று மும்பையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அரசு தரப்பில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், வருவாய்த்துறை மந்திரி பாலசாகேப் தோரட், பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் பாரதீய ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பிரவீன் தரேகர், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சில தலைவர்கள் மந்திராலயா வந்து கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

இந்த மாத இறுதிக்குள்

மராட்டியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உங்களின் (எதிர்க்கட்சி தலைவர்கள்) கருத்துகளை தெரிந்து கொள்வதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். நீங்கள் ஊடகங்களில் சொல்வதையும் கவனித்து வருகிறேன். அவை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நல்ல பரிந்துரைகள் என்றால், அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அரசு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி வருகிறேன்.

மத்திய அரசு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பான வழிகாட்டுதலுக்கு பிரதமரை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயரவில்லை.

இந்த மாதத்தில் நிலைமையை கவனித்துக் கொள்ள வேண்டும். மும்பையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு போதுமான தனிமை முகாம்களை அமைத்து உள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாநிலத்தில் நோய்தொற்று கட்டுப்படுத்தப்படும். கொரோனா வேகமாக பரவி வரும் மாலேகாவ் மற்றும் அவுரங்காபாத் நகரங்களில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேவேந்திர பட்னாவிஸ்

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், கொரோனா பரவலில் மும்பையின் நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மருத்துவமனை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அதிக ரெயில்களை இயக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நிற்கும் போலீசாரின் மனஉறுதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொழில்கள் புத்துயிர் பெறுவதற்கு மண்டல வாரியாக நிபுணர் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றார்.

ராஜ்தாக்கரே

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதில் காவல்துறைக்கு உதவ மாநில ரிசர்வ் போலீஸ் படையை அனுப்புவதற்கு அரசுக்கு பரிந்துரைத்தேன்.

அரசு நிர்வாகத்தை மக்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளும் இடங்களில் அதிக சக்தி தேவைப்படுகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் போலீஸ் படையை அதிகப்படுத்த வேண்டும். ரம்ஜானை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும் என முஸ்லிம்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை

சொந்த ஊர் செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள் திரும்பி வராவிட்டால், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கப்பட வேண்டும். ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் மராட்டித்திற்கு திரும்ப விரும்புவோர் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.

மாநிலத்தில் உள்ள தனியார் கிளினிக்குகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முககவசம் ஏன் அணியவில்லை

17-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜ்தாக்கரே, வருகிற 25-ந் தேதி ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதிக்கு பின் ஊரடங்கு முடிந்து மக்கள் வீதிகளில் வந்தால் கொரோனா தொற்று அதிகரித்தால் என்ன ஆகும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும் என்றார்.

மந்திராலயாவுக்கு வந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ராஜ்தாக்கரே மட்டும் முககவசம் அணியாமல் இருந்தார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, ராஜ்தாக்கரே சிரித்தார். மற்றவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருந்ததால் நான் முககவசம் அணியவில்லை என்று கூறினார்.

Next Story