டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு
மதுரையில் டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நேற்று மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 60 கடைகள் அடைக்கப்பட்டன. மீதம் உள்ள அனைத்து கடைகளும் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன. மேலும் கடை முன்பு கூட்ட நெரிசலை தவிர்க்க கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அது தவிர சமூக இடைவெளியை பின்பற்ற சில இடங்களில் போதிய இடைவெளிவிட்டு வட்டம் வரையப்பட்டு இருந்தது.
மது வாங்க சிலர் காலை 8 மணிக்கே மதுக்கடைக்கு வந்துவிட்டனர். அவர்களிடம் போலீசார் ஆதார் அட்டையை வாங்கி சரிபார்த்து வரிசையில் நிற்க வைத்தனர். ஆனால் மதுரை நகரில் மாநக ராட்சி வழங்கிய அனுமதி அட்டையுடன் வரவேண்டும் என்று போலீசார் சிலரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஒரு சிலர் தங்களுக்கு இன்னும் அனுமதி அட்டை வரவில்லை என்று கூறி போலீசாரிடம் தகராறும் செய்தனர். ஒரு சில இடங்களில் அரசு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக சிலர் மது வாங்க வந்தனர். அவர்களையும் போலீசார் திருப்பி அனுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மது வாங்க வந்தவர்கள் முககவசம் அணிந்து வந்ததை பார்க்க முடிந்தது. ஒரு சில இடங்களில் மது வாங்க வந்தவர்களுக்கு கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. நகரில் ஆரப்பாளையம், புதூர் உள்ளிட்ட சில பகுதியில் மது வாங்க வந்தவர்களின் கூட்டம் அதிகமாகவும், சில இடங்களில் கூட்டம் இல்லாமலும் இருந்ததை காண முடிந்தது. காலை 10 மணிக்கு மது விற்பனை தொடங்கியது.
இந்த நிலையில் செல்லூரில் திருவாப்புடையார் கோவில் அருகே உள்ள மெயின் ரோட்டில் மதுக்கடை திறக்கப்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் மதுக்கடை முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கடை முன்பு மது வாங்க நின்றிருந்தவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு நேற்று மது விற்பனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story