தனிமை காலம் அதிக பலத்தை கொடுத்துள்ளது - மந்திரி சுதாகர் பேட்டி


தனிமை காலம் அதிக பலத்தை கொடுத்துள்ளது - மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2020 11:41 PM GMT (Updated: 7 May 2020 11:41 PM GMT)

தனிமை காலம் அதிக பலத்தை கொடுத்துள்ளது என்று மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு, 

மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததை அடுத்து, 14 நாட்களாக தனிமையில் இருந்தார். தனிமை காலம் நிறைவடைந்ததை அடுத்து அவர் நேற்று விதான சவுதாவுக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் கடந்த 14 நாட்களாக தனிமையில் இருந்தேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இன்னும் சிறப்பான முறையில் செயல்பட இந்த தனிமை காலம் எனக்கு அதிக பலத்தை கொடுத்துள்ளது. எனக்கு கொரோனா வைரஸ் இருக்காது என்பது தெரியும். ஆனால் விதிமுறைப்படி நான் தனிமைபடுத்தி கொண்டேன்.

கலந்துரையாடல் நடத்தினேன்

தனிமையில் இருந்தது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. வீட்டில் இருந்தபோது, காணொலி காட்சி மூலம் நான் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினேன். மாநில அரசு பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு நிதி உதவி திட்டத்தை அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்துவதால், கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. நாம் கொரோனாவுடன் வாழ்வதை தவிர்க்க முடியாது. பொதுமக்கள் தேவையான முன்எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

விமான நிலையத்தில் ஆய்வு

அதே போல் தனிமை காலத்தில் இருந்த போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி ஆகியோரும் நேற்று தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.

வருகிற 11-ந் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள கன்னடர்கள் விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வசதிகளை மந்திரிகள் சுதாகர், பசவராஜ் பொம்மை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். வெளிநாடுகளில் இருந்து 6,500-க்கும் மேற்பட்டவர்கள் வர உள்ளதாகவும், அவர்கள் 2 அடுக்கு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் மந்திரிகள் தெரிவித்தனர்.

Next Story