ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 12:08 AM GMT (Updated: 8 May 2020 12:08 AM GMT)

ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என சிவகாசி மற்றும் திருச்சுழி தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

சிவகாசி, 

கொரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். 

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு தாலுகா அலுவலகம் வந்த 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை தொடங்கினர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததன் பேரில் 2½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல் திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் குமரேசன், துணைச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ராமு, செயற்குழு உறுப்பினர் முருகன், திருச்சுழி ஒன்றிய செயலாளர் அன்புச்செல்வன், நகர செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களிடம் துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி, தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story