புதிதாக உருவாக்கப்பட்ட ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு


புதிதாக உருவாக்கப்பட்ட ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 May 2020 12:10 AM GMT (Updated: 8 May 2020 12:10 AM GMT)

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அலுவலகத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தை 2-ஆக பிரித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிர்வாக செயல்பாடுகள் தொடக்க விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நிர்வாக செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

புதிய பஸ் நிலையம்

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 10 கிராம ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாக செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். ஏரியூரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஏரியூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தனபால், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வேலுமணி, இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story