திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 5:49 AM IST (Updated: 8 May 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று கூத்தாநல்லூர் அருகே உள்ள காடுவெட்டி என்ற இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. ஆனால் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் 30 பேர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதேபோல் வடபாதிமங்கலத்தில் தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து டோக்கன் பெற்று மதுப்பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர். இதையடுத்து கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர் விளமல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் ரஜினிசின்னா, கருணாநிதி, ரவி், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கருப்பு சட்டை அணிந்து மதுக்கடைக்கு எதிராக கோஷங்கள் எழுப்்பினர். இதேபோல் புலிவலத்தில் ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான செல்வராசு தலைமை தாங்கி கருப்புக்கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் கட்சியினர் தங்களின் வீடுகளின் முன்பாக கருப்பு கொடியுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரடாச்சேரி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டனர்.

இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியம் காட்டூரில் உள்ள மதுக்கடை முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புச்சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும் கொரடோச்சேரி ஒன்றியம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்

இதேபோல் கோட்டூர் அருகே நெருஞ்சனக்குடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமூக இடைவெளியை கடைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இருள்நீக்கி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமையிலும், அகரம் களப்பால் கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர் அருகே ஆதிச்சபுரம் தெற்கு தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை திறக்க ஊழியர்கள் நேற்று காலை வந்தனர். தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி கடையை நோக்கி திரண்டனர். இதனை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மன்னார்குடி

இதேபோல் மதுக்கடை திறப்பை கண்டித்து நேற்று மன்னார்குடியில் மதுக்கூர் சாலையில் உள்ள டி.ஆர்.பாலு எம்.பி.யின் வீட்டின் முன் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம், தி.மு.க. நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், வர்த்தக சங்க மாநில நிர்வாகி ஞானசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த திணறி வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினால் அரசு ஏற்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். திருவாரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலையாமங்கலம் பாலு தனது வீட்டின் முன்பு தனது குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. உள்ளிக்கோட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மன்னார்குடி நகரக்குழு சார்பில் மன்னார்குடி கட்சி அலுவலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. வை.சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்றது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி சவளக்காரனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை பேரூராட்சி முன்பு மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் சியா நவாஸ்கான், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் வெற்றி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் ஒன்றியம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஒன்றியம் பச்சைக்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ரஜினி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நீடாமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சித்தமல்லி ந.சோமசுந்தரம் வீட்டில் ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒளிமதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜான்.கென்னடி தலைமையில் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஆதனூர், தேவங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story