கோவை அருகே, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ்மாக் கடை மூடல் - மதுவாங்க திரண்டிருந்த ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


கோவை அருகே, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ்மாக் கடை மூடல் - மதுவாங்க திரண்டிருந்த ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 May 2020 11:00 PM GMT (Updated: 8 May 2020 1:48 AM GMT)

கோவை அருகே பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் மது வாங்க திரண்டிருந்த ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேரூர்,

கோவை மாவட்டத்தில் நேற்று 206 டாஸ்மாக் கடைகள், அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இதில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தென்னமநல்லூர் புத்தூர் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடை முன்பும் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் வரையப்பட்டு இருந்தன. காலை 10 மணிக்குதான் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், காலை 9 மணிக்கு மதுப்பிரியர்கள் அந்த கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் மதுபானங்கள் வாங்க காத்து நின்றனர்.

10 மணிக்கு கடையை திறக்க கடை ஊழியர்கள் அங்கு வந்தனர். நீண்ட நாளுக்கு பின்னர் மதுபானத்தை வாங்கி குடிக்கலாம் என்று என்ற ஆவலுடன் மதுப்பிரியர்கள் நின்றனர். அப்போது அங்கு புத்தூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென்று அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் அந்த கடையை திறக்கக்கூடாது என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த கடை ஊழியர்கள், அரசு உத்தரவின் பேரில்தான் கடையை திறக்கிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், அரசு உத்தரவிட்டாலும் வேறு இடத்தில் கடையை திறங்கள், எங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறகு அவர்கள் அங்குள்ள தொண்டாமுத்தூர்-போளுவாம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிறகு அவர்கள் அங்கு திரண்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எங்கள் ஊரில் மதுக்கடையை திறந்தால் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பெண்கள் உறுதியுடன் கூறினார்கள். இதையடுத்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள். சிறிது நேரத்துக்கு பின்னர் அங்கிருந்த பெண்களிடம் பேசிய போலீசார், அந்த கடையை திறக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். அத்துடன் அந்த கடையும் மூடப்பட்டது.

இதற்கிடையே டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்பதை அறிந்த மதுபான பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான் கடை மூடப்பட்டது என்பதால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Next Story