மாவட்ட செய்திகள்

44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறப்பு: நீலகிரியில் மதுபானங்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - டோக்கன் முறையில் வினியோகம் + "||" + 44 days after Task Shop Opening: Alemodyne meeting to buy alcoholic beverages in Nilgiris

44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறப்பு: நீலகிரியில் மதுபானங்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - டோக்கன் முறையில் வினியோகம்

44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறப்பு: நீலகிரியில் மதுபானங்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - டோக்கன் முறையில் வினியோகம்
44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் நீலகிரியில் மதுபானங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் டோக்கன் முறையில் மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டது.
ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் மதுக்கடைகள் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர். மேலும் மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் தமிழக அரசின் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் 63 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் போன்ற இடங்களில் 44 நாட்களுக்கு பின்னர் டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுபிரியர்கள் மகிழ்ச்சியில் காலை முதலே மதுக்கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். கூட்டத்தை கட்டுப்படுத்த கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

6 அடி தூர இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். மதுக்கடைகளுக்கு வருகிறவர்களுக்கு பணியாளர்கள் வெளியே நின்று கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி வழங்கினர். முகக்கவசம் அணிந்து வந்தால் தான் மதுபானங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று வாங்க வேண்டும், ஒரு நபருக்கு ஒரு புல் மதுபானம் வழங்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

நேரம் செல்ல, செல்ல மதுக்கடைகளில் மதுபானங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆதார் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு டோக்கன் முறையில் மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டன. பணியாளர்கள் பணத்தை எச்சில் தொட்டு எண்ணக்கூடாது என்று அறிவுரை கூறப்பட்டது. ஊட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் வெளிநாட்டு மதுபானங்களை வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு காத்திருந்தனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திடீரென அந்த மதுக்கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அங்கு வருகிறவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படாததும், குப்பைகள் அகற்றாததும் தெரியவந்தது. மதுக்கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் தெரிவித்ததுடன், மதுக்கடைகளுக்கு வருகிறவர்களுக்கு கிருமிநாசினி வழங்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மதுக்கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். இதேபோல் அந்தப்பகுதியில் உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளுக்கும் சென்று ஆய்வு செய்தார்.

கூடலூரில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் நேற்று காலை 6 மணிக்கு சிலர் டாஸ்மாக் கடையில் மதுவாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடை முன்பாக இடத்தை பிடிக்க ஹெல்மெட் அல்லது கற்களை வைத்து காத்து இருந்தனர். இதனால் போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர். காலை 9.30 மணிக்கு கடையை திறந்த டாஸ்மாக் ஊழியர்கள் கிருமிநாசினி கொண்டு மதுபாட்டில்கள் உள்பட கடைகள் முழுவதும் தெளித்தனர்.

தொடர்ந்து சரியாக காலை 10 மணிக்கு கடைகள் முன்பு வரிசையாக நின்றிருந்த வாடிக்கையாளர்களின் கைகளில் கிருமிநாசினி அல்லது சோப் மூலம் சுகாதாரம் செய்யப்பட்டது. பின்னர் அடையாள அட்டைகளை காண்பித்த வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக மதுபாட்டில்களை வழங்கி விற்பனையை தொடங்கினர். கூடலூர் நகரில் 7 மதுக்கடைகள் உள்ளது. சில கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒலிபெருக்கிகள் மூலம் டாஸ்மாக் ஊழியர் அறிவித்தவாறு கூட்டத்தை சரி செய்து கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரம் மட்டுமே கூட்டம் அதிகமாக இருந்தது.

அதன்பின்னர் படிப்படியாக கூட்டம் சற்று குறைய தொடங்கியது. வாடிக்கையாளர்கள் வந்த உடன் மதுபானங்களை வழங்கி விரைவாக அனுப்பி வைத்தனர். இதனிடையே டாஸ்மாக் கடை முன்பு வரிசையில் நிற்பதால் வாடிக்கையாளர்கள் கூச்சப்பட்டனர். இதை அறிந்த கடை மேற்பார்வையாளர்கள் வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களின் உருவம் தெரியாத வகையில் கடை முன்பு பிளாஸ்டிக் விரிப்புகளை வைத்து மறைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில வாடிக்கையாளர்கள் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க மது வாங்க கொண்டு வந்து இருந்த பைகளை வைத்து தங்களது முகத்தை மறைத்து கொண்டனர்.

இதேபோல் பந்தலூர் தாலுகாவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வாடிக்கையாார்கள் எல்லையோரங்களில் நுழைந்து மது வாங்கி சென்றனர். குந்தா தாலுகா மஞ்சூர் அருகே ஊரடங்கு காலத்துக்கு முன்பு வரை எடக்காடு, மஞ்சூர், தேவர்சோலை, பிக்கட்டி, எமரால்டு ஆகிய இடங்களில் 5 மதுபான கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் எமரால்டு பகுதி கொரோனா வைரஸ் தொற்று பிரச்சினையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அங்கு மதுக்கடை திறக்கப்பட வில்லை.

இதேபோல் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பிக்கட்டியில் மதுக்கடை திறக்க அனுமதி வழங்க வில்லை. பாதகண்டி என்ற இடத்தில் டோக்கன் வழங்கப்பட்டு சுமார் ½ கி.மீட்டர் தூரம் உள்ள எடுக்காடு டாஸ்மாக் கடையில் மதுவாங்கி கொள்ள மதுபிரியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.