திருச்சியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல்நாளில் மது குடித்த ஓட்டல் ஊழியர் திடீர் சாவு


திருச்சியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல்நாளில் மது குடித்த ஓட்டல் ஊழியர் திடீர் சாவு
x
தினத்தந்தி 8 May 2020 3:19 AM GMT (Updated: 8 May 2020 3:19 AM GMT)

டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல்நாளில் திருச்சியில் மது குடித்த ஓட்டல் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மலைக்கோட்டை, 

டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல்நாளில் திருச்சியில் மது குடித்த ஓட்டல் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் 44 நாட்களுக்கு பிறகு நேற்று டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து முதல்நாளான நேற்று மது வாங்க ஆர்வமுடன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. மதுபிரியர்களும் நீண்டவரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் திருச்சியில் நேற்று மது குடித்த ஓட்டல் ஊழியர் திடீரென இறந்தார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஓட்டல் ஊழியர் திடீர் சாவு

திருச்சி பெரியகடைவீதி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் சரவணன்(வயது 45). இவர் நேற்று பகல் அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று பீர் வாங்கினார். பார்கள் திறக்கப்படாததால் அங்குள்ள சந்து பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு சென்று பீர் குடித்தார். சிறிதுநேரத்தில் பெரியகடைவீதிக்கு நடந்து வந்த அவர், அங்கு ஒரு கடையின் வாசலில் மயங்கினார்

இதை கண்ட அந்த பகுதியினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மது குடித்த சிறிதுநேரத்தில் அவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் மது குடித்ததால் இறந்தாரா? அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இறந்தாரா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story