டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 May 2020 9:45 PM GMT (Updated: 8 May 2020 3:42 AM GMT)

டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 3-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தலைமையி்ல் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் நகர செயலாளர் கோட்டை அ.பாபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எச்.ஜலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி துரிஞ்சாபுரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் துரிஞ்சாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தி.சரவணன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷம் எழுப்பினர். அதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாராணி சதாசிவம், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் டாஸ்மாக் கடை முன்பு கண்ணமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் கோவர்தனன் தலைமையில் கட்சியினர் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் ஆத்துவாம்பாடி, கேளூர் ஆகிய கிராமங்களிலும் ஏராளமான மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கி சென்றனர்.

திருவண்ணாமலை சாரோனில் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ.தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, கிரி மற்றும் சி.என்.அண்ணாதுரை எம்.பி.உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story