ஆரணி அருகே, ஒரு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்த ‘குடி’மகன்கள் - சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை


ஆரணி அருகே, ஒரு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்த ‘குடி’மகன்கள் - சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 8 May 2020 3:42 AM GMT)

ஆரணி அருகே மதுபானங்களை வாங்க குடிமகன்கள் டாஸ்மாக் கடை முன்பு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு, சமூக விலகலை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது.

ஆரணி,

தமிழக அரசு மதுபானக்கடைகளை திறக்க உத்தரவிட்டதால் பல்வேறு இடங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக சுணக்கமாக இருந்த குடிமகன்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆரணி நகரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மதுபானக் கடைகள் ஏதும் இல்லாததால், பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டுள்ள மதுபானக்கடைகளுக்கு குடிமகன்கள் படையெடுத்தனர்.

ஆரணி-சந்தவாசல் சாலையில் கைக்கிலந்தாங்கல், நடுக்குப்பம், பாட்டைகுளம் ஆகிய பகுதிகளில் திறந்திருந்த மதுபானக்கடைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிமகன்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக நின்றனர். ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப மதுவகைகள் வழங்கப்பட்டன. கடைகளை திறந்த ஒருசில மணிநேரத்திலேயே அனைத்து மதுபாட்டில்களும் விற்றுத் தீர்ந்தன.

புதிதாக மது பாட்டில்கள் சப்ளை இல்லாத நிலையில் ஏற்கனவே இருப்பு வைத்திருந்த மதுபாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. மதுபானக்கடைகளில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசாரும், போலீஸ் நண்பர்கள் குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், குடிமகன்களை வரிசையில் நிற்க செய்து ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.

செய்யாறு தொகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் கொரோனா தொற்றுள்ள பகுதிகள் நீங்கலாக ஒருசில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன் தடுப்பு வேலிகள் அமைத்தும், மதுபிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க தரையில் 3 அடி தூரத்தில் வட்டமிட்டும் முன்னேற்பாடு பணிகளை செய்திருந்தனர். மதுபிரியர்கள் அதிகாலை முதலே கடைகளின் முன்பு திரண்டனர்.

அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் மதுவாங்க வந்தவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை. இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. வரிசையில் காத்திருந்த சிலர் பொறுமை இழந்து மது விற்பனை செய்க எனக் கூச்சலிட்டனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கீழ்பென்னாத்தூர், மேக்களூர், வேட்டவலம், தளவாகுளம், இசுக்கழி, அண்டம்பள்ளம் ஆகிய 6 ஊர்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபிரியர்கள் நேற்று காலை 10 மணியளவில் உரிய ஆவணங்களுடன் சென்று மதுபானத்தை வாங்கி சென்றனர். கீழ்பென்னாத்தூர் டாஸ்மாக் கடை முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதில் காஞ்சி, சி.நம்மியந்தல் கூட்ரோடு, மஷார், பத்தியவாடி ஆகிய கடைகளின் அருகில் உள்ள கிராமங்களில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தால் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படவில்லை.

மேலும் நார்த்தாம்பூண்டி, பழங்கோயில், பொர்க்குணம் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க முயன்றனர். ஆனால் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் கடைகளை திறக்கவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த 3 டாஸ்மாக் கடைகளும் திறக்கவில்லை. ஆக மொத்தம் கலசபாக்கம் ஒன்றியத்தில் 7 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்தந்தப் பகுதியில் உள்ள மதுபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story