மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு: சேலத்தில் கருப்பு சட்டை அணிந்து தி.மு.க.வினர் போராட்டம்


மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு: சேலத்தில் கருப்பு சட்டை அணிந்து தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 10:13 AM IST (Updated: 8 May 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து அவரவர் வீடுகளில் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது.

அதன்படி சேலம் குமாரசாமிப்பட்டியை அடுத்துள்ள ராம்நகரில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி தனது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் மதுக்கடையை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் தி.மு.க.வினரும், தங்களது வீடுகள் முன்பு கருப்பு சட்டையை அணிந்தவாறு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள்

சேலம் அஸ்தம்பட்டி டி.வி.எஸ். நகர் மீனாட்சி காலனி பகுதியில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தனது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் செயலை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கொரோனாவை ஒழிப்பதில் அ.தி.மு.க அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார். காலை 10 மணி முதல் 10.15 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தில் மாநகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதை போல் சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகரில் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி தனது வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கூட்டணி கட்சியினர்

மேலும் சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரே வசிக்கும் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தனது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல் சேலம் மாநகர் பகுதியில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு கருப்பு சட்டையை அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயபிரகாஷ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், தமிழக அரசு கேட்ட நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.

வீரபாண்டி

மேலும் டாஸ்மாக் மதுக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீரபாண்டியில் உள்ள தனது வீட்டு முன்பு, தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல மேட்டூர், ஓமலூர், இளம்பிள்ளை, இடங்கணசாலை, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தலைவாசல் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story