பெத்தநாயக்கன்பாளையத்தில் தாசில்தார் அலுவலகத்தில் குடியேற முயன்ற மாற்றுத்திறனாளிகள் போலீசார் தடுத்து நிறுத்தினர்


பெத்தநாயக்கன்பாளையத்தில் தாசில்தார் அலுவலகத்தில் குடியேற முயன்ற மாற்றுத்திறனாளிகள் போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 8 May 2020 4:49 AM GMT (Updated: 2020-05-08T10:19:15+05:30)

பெத்தநாயக்கன்பாளையத்தில் தாசில்தார் அலுவலகத்தில் குடியேற முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பெத்தநாயக்கன்பாளையம்,

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அலுவலகம் சென்று குடியேறும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க வட்டத்தலைவர் பாரதி, மாவட்ட இணைச்செயலாளர் கந்தன், வட்ட பொருளாளர் சுமதி, செயலாளர் காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் ரங்கசாமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

தாசில்தாரிடம் மனு

தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் குடியேற சென்ற அவர்களை ஏத்தாப்பூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே அங்கு வந்த தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், தாசில்தாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story