பெரம்பலூரில் ஓய்வு பெற்ற வேளாண் பொறியாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெரம்பலூரில் ஓய்வு பெற்ற வேளாண் பொறியாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 May 2020 5:33 AM GMT (Updated: 8 May 2020 5:33 AM GMT)

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை பொறியாளர் வீட்டில் 24 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை பொறியாளர் வீட்டில் 24 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வேளாண்மை பொறியாளர் வீடு

பெரம்பலூர் துறைமங்கலம் 9-வது வார்டுக்குட்பட்ட அவ்வையார் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 65). இவர் வேளாண்மைத்துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி தேன்மொழி(50) எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வசந்தன்(29) என்கிற மகன் உள்ளார். அவருக்கும் திருமணமாகி புவனேஸ்வரி(24) என்கிற மனைவி உள்ளார். வசந்தன் தமிழக அரசின் புள்ளியியல் துறையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வாசுதேவன் தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் தனது வீட்டில் வசித்து வருகிறார்.

தற்போது கோடை காலம் என்பதால் இரவு நேரத்தில் காற்றோட்டத்திற்காக வாசுதேவன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் முதல் மாடியில் படுத்துள்ளார். இதில் வாசுதேவனும், தேன்மொழியும் வீட்டில் உள்ள ஒரு கட்டிலிலும், வசந்தன், அவரது மனைவியுடன் வெளியில் உள்ள ஒரு கட்டிலிலும் படுத்துள்ளனர். அப்போது காற்றுக்காக கதவு பூட்டாமல், சாத்தி வைக்கப்பட்டிருந்தது.

24 பவுன் நகைகள்- 3 செல்போன்கள் திருட்டு

இந்நிலையில் நேற்று அதிகாலை வசந்தன் பால் வாங்க பாத்திரம் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அதனருகே உள்ள அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 24 பவுன் நகை, வெள்ளி அரைஞாண் கொடி மற்றும் டி.வி. அருகே வைக்கப்பட்டிருந்த 3 செல்போன்கள் திருடு போயிருந்தன.

மேலும் வீட்டின் பின்புறம் நகைகள் வைக்கப்பட்டிருந்த பைகள் மட்டும் சிதறி கிடந்தன. இதுகுறித்து வாசுதேவன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் வலைவீச்சு

இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பெரம்பலூர் நகர்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story