சமூக இடைவெளியின்றி டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள் - 3 மணி நேரம் வரிசையில் நின்று மதுபானம் வாங்கினர்
தேனி மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிட்டு, சமூக இடைவெளியின்றி டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர்.
தேனி,
கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் அன்றைய தினமே அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 94 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணியில் பலர் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கொரோனா வைரஸ் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
இதில் தேனி மாவட்டத்தில் 38 கடைகள் திறப்பதாக இருந்தது. இந்நிலையில், தேவாரம் அருகே டி.லட்சுமிநாயக்கன்பட்டி கிராமத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள 2 கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து மாவட்டத்தில் 36 மதுபான கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
மதுபான கடைகளின் முன்பு கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை உள்ள போதிலும், மதுக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் எச்சரிக்கை செய்வதற்காக கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு இருந்தன.
10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 7 மணிக்கே மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வரத் தொடங்கினர். அதற்கு முன்பே பாதுகாப்பு பணிக்கு வந்து இருந்த போலீசார், காலை நேரத்தில் வந்த மக்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், காலை 9 மணியளவில் டோக்கன் வழங்கும் பணி நடந்தது. டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மக்களை வரிசையாக நிறுத்தி டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கன் பெற்றுக் கொண்ட மக்கள் மீண்டும் மதுபானம் வாங்குவதற்கு வரிசையில் நின்றனர்.
கொடுவிலார்பட்டி, கண்டமனூர், காமாட்சிபுரம், டொம்புச்சேரி, போடி அருகே சங்கராபுரம், தேவதானப்பட்டி, கூடலூர் என மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்ட மதுக்கடைகளின் முன்பு நேற்று கூட்டம் அலைமோதியது. டொம்புச்சேரி, கொடுவிலார்பட்டி, தேவதானப்பட்டி போன்ற இடங்களில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் மதுபான பிரியர்கள் காத்திருந்தனர்.
ஒவ்வொரு மதுக்கடையிலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் குடிமகன்கள் முண்டியடுத்துக் கொண்டு வரிசையில் நின்றனர். மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், அப்பகுதிகளில் வசிக்கும் நபர்கள் அருகாமையில் கடைகள் திறந்து இருந்த பகுதிகளுக்கு சென்று மதுபானம் வாங்கினர்.
கடைகளில் கூட்டம் அலைமோதியதால் மதுப்பிரியர்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர். பலர் மதுபானம் வாங்கிய வேகத்தில் கடைக்கு அருகிலேயே பாட்டிலை திறந்து குடித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அத்தனை கட்டுப்பாடுகளையும் தகர்த்து மதுபான பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தது நோய் பரவல் குறித்த அச்சத்தை பொதுமக்களிடம் மேலும் அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story