தேனி மாவட்டத்தில், காதல் தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா - இரட்டை குழந்தைகளுடன் மருத்துவமனையில் அனுமதி


தேனி மாவட்டத்தில், காதல் தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா - இரட்டை குழந்தைகளுடன் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 8 May 2020 6:37 AM GMT (Updated: 8 May 2020 6:37 AM GMT)

தேனி மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதி இரட்டை குழந்தைகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் போடியை சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்து குணமாகி 42 பேர் வீடு திரும்பி உள்ளனர். மற்ற 8 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தேவாரம் அருகே உள்ள டி.லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த 33 வயது ஆட்டோ டிரைவர், அவருடைய மனைவி மற்றும் ஓடைப்பட்டியை சேர்ந்த 35 வயதுடைய லாரி டிரைவர் ஆகியோர் ஆவார்கள்.

டி.லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த நபர், சென்னை திருவேற்காடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது அங்கு காதல் திருமணம் செய்து மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 மாத இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகளுடன் அவர்கள், கடந்த 3-ந்தேதி டி.லட்சுமிநாயக்கன்பட்டிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள ஆய்வக பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும், அவர்களின் குழந்தைகளுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான ஓடைப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி லாரியை ஓட்டிச் சென்று திரும்பி வந்துள்ளார். அவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து டி.லட்சுமிநாயக்கன்பட்டி மற்றும் ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. அந்த கிராமப்புற பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த பட்டியல் சேகரித்து அவர்களுக்கும் சளி மாதிரி சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story