கொரோனா சமூக பரவல் ஏற்படும் எனக்கூறி டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
கொரோனா சமூக பரவல் ஏற்படும் என்று கூறி, டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்,
கொரோனா சமூக பரவல் ஏற்படும் என்று கூறி, டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பிற்கு வந்த போலீசாரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
தமிழக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டு, மது விற்பனை நடைபெற்றது. இதற்கிடையே வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் கடையை திறந்தால் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத கிராமங்களுக்கு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் மரக்கிளைகள் போன்றவற்றை வெட்டிப்போட்டு தடை ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பிற்காக வந்த போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருகிற 17-ந் தேதிக்கு பின்பு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்றும், அதுவரை கடையை திறக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கை
இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், முருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும், வெளியூர்களில் இருந்து வருபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story