ஊரடங்கு தளர்வு காரணமாக மின்சார தேவை அதிகரிப்பு: அனல் மின்நிலையங்களில் முழுவீச்சில் மின்சாரம் உற்பத்தி
ஊரடங்கு தளர்வு காரணமாக மின்சார தேவை அதிகரித்து இருப்பதால், அனல்மின்நிலையங்களில் முழுவீச்சில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.
தூத்துக்குடி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டன. அனைத்து தொழில்களும் முடங்கின. இதனால் மின்சார தேவை குறையத் தொடங்கியது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி எடுக்கும். இதனால் மின்சார தேவை அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் தமிழகத்தின் மின்தேவை 16 ஆயிரத்து 151 மெகாவாட்டாக ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால் மின்சார தேவை குறைவாகவே உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தமிழகத்தில் மின்சார தேவை 9 ஆயிரத்து 761 மெகாவாட்டாக இருந்தது.
இதனால் பெரும்பாலான அனல்மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் மொத்தம் 192 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு 2-வது ஊரடங்கு முடிவடையும் தருவாயில் கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் படிப்படியாக மின்சார தேவை அதிகரித்தது. கடந்த 3-ந் தேதி 11 ஆயிரத்து 294 மெகாவாட்டாகவும், 7-ந் தேதி 12 ஆயிரத்து 289 மெகாவாட்டாகவும் தேவை அதிகரித்தது. இதனால் மின்சார உற்பத்தி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
840 மெகாவாட்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் உள்ளன. இதில் 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மற்றபடி மின்சார தேவை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்உற்பத்தி எந்திரங்கள் அனைத்தும் இயக்கப்பட்டு உள்ளன. நேற்று 1, 2, 3, 4 ஆகிய 4 மின்உற்பத்தி எந்திரங்களிலும் முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
மேலும் ஊரடங்கு தளர்வு காரணமாக படிப்படியாக தொழிற்சாலைகள் இயங்க தொடங்குவதால் மின்தேவை அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story