அம்பையில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
அம்பையில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அம்பை,
அம்பை பாபநாசம் ரோட்டில் தனியார் நூற்பாலை அருகில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடை மூடப்பட்டது.
இந்த நிலையில் அந்த கடையை மீண்டும் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அம்பை தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். இருப்பினும், நேற்று முன்தினம் அந்த கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
நேற்று அந்த கடையை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது ஒரு பெண் திடீரென பந்தல் கம்பால் பூட்டியிருந்த கடையை தாக்கினார். உடனே போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கைது செய்வதை போலீசார் கைவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலால் தாசில்தார் லதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் கடையை மூடும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் மக்கள் அபிவிருத்தி சங்க தலைவரும், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.யுமான ஜான் நிக்கல்சன், தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன், ம.தி.மு.க. நகர செயலாளர் முத்துசாமி, காங்கிரஸ் நகர தலைவர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் வடிவேல் ஆகியோரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் கலெக்டரிடம், டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஷில்பா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story