நன்னிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


நன்னிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 May 2020 10:30 PM GMT (Updated: 8 May 2020 10:30 PM GMT)

நன்னிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் பிளஸ்-2 மாணவி இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்னிலம், 

நன்னிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் பிளஸ்-2 மாணவி இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-2 மாணவி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மகிழஞ்சேரி கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகள் மவுனிகா(வயது 17), மகன் சந்தோஷ்(15). இவர்களில் மவுனிகா அருகில் உள்ள பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

தினமும் இரவு மவுனிகா தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள தனது பாட்டி சரோஜா வீட்டுக்கு தூங்குவதற்காக செல்வார். காலையில் எழுந்து தனது வீட்டுக்கு வருவார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கன்னியம்மன் கோவிலில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு உள்ளார். இரவு 9.30 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு தூங்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

வயல் வெளியில் பிணம்

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மவுனிகா வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் பாட்டி வீட்டில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு மவுனிகாவை காணவில்லை. வீட்டில் இருந்த சரோஜாவிடம் மவுனிகாவின் பெற்றோர், மவுனிகா எங்கே? என்று கேட்டு உள்ளனர்.

அதற்கு அவர் நேற்று இரவு(நேற்று முன்தினம்) இங்கு தூங்குவதற்கு வரவில்லையே என்று கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மவுனிகாவின் பெற்றோர் அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள வயல்வெளியில் மவுனிகா பிணமாக கிடந்தார்.

உடலில் காயங்கள்

அவரது முழங்கை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. மகள் பிணமாக கிடந்ததை பார்த்த மவுனிகாவின் பெற்றோர் கதறி அழுதனர். அவர்களது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டாரா?

இதுகுறித்து மவுனிகாவின் தந்தை செந்தில் கொடுத்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டி வீட்டுக்கு தூங்குவதற்காக சென்ற மாணவி வயல்வெளிக்கு எப்படி சென்றார்? அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் வயல்வெளியில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story