கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு


கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2020 11:10 PM GMT (Updated: 8 May 2020 11:10 PM GMT)

மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில் மதுபோதையில் ஏற்பட்ட விபத்து-தகராறு காரணமாக 100 பேர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம், 

மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில் மதுபோதையில் ஏற்பட்ட விபத்து-தகராறு காரணமாக 100 பேர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கடைகள் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா நோயாளிகள் பலர் கும்பகோணம் நகர் பகுதியில் இருந்ததால் கும்பகோணத்தில் 27 இடங்களில் போலீசார் சீல் வைத்து அடைத்தனர். இதனால் கும்பகோணம் சரக பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தகுடி, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கும்பகோணத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அருகே கிராமங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கி குடித்தனர். இதில் மதுபோதை அதிகமானதால் ஆங்காங்கே வாகன விபத்துகள், தகராறு ஆகியவை ஏற்பட்டன.

மோதிக்கொண்டதால் பரபரப்பு

இதனால் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில் மதுபோதையினால் ஏற்பட்ட தகராறு மற்றும் விபத்துகளால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 100 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தகராறு செய்து கொண்ட இருதரப்பினரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அப்போது அங்கு வைத்தும் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் டாக்டர், செவிலியர்கள் உள்ளனர். இந்த நிலையில் மது போதையுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இவர்களை சமாளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர்களும், ஊழியர்களும் தடுமாற்றத்துடன் இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் தனியார் கிளினிக்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர் என்றனர்.

Next Story